அபூபக்ர் (ரலி)

17 02 2011

முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்களுக்குப் பின் ஒருவரை நேசிக்க வேண்டுமானால் அபூபக்ர் (ரலி) அவர்களைத் தான் நேசிக்க வேண்டும். பல்வேறு கடுமையான சூழ்நிலைகளிலும் மார்க்கத்தில் வளைந்து கொடுக்காதவர். அவரது ஈமான் எந்த அளவிற்கு உறுதியானது என்பதை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கலாம்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (பனூ ஹர்ஸ் குலத்தாரின் இல்லங்கள் அமைந்துள்ள) ஸுன்ஹ் என்னுமிடத்தில் இருந்து கொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பெய்தினார்கள்.
அப்போது உமர் (ரலி) அவர்கள் எழுந்து, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித் தான் ( நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்று தான்) தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி(ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள் என்று சொன்னார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் (அங்கே) வந்து அல்லாஹ்வின் தூதரைப்
போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு விட்டு, அழுதார்கள், பின்பு, ‘அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்! நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! அல்லாஹ் உங்களுக்கு இரண்டு மரணங்களை ஏற்படுத்தவில்லை. உங்கள் மீது விதிக்கப்பட்ட அந்த மரணத்தை நீங்கள் அடைந்துவிட்டீர்கள் ‘ என்று சொல்லிவிட்டு
வெளியேறினார்கள்.

(வெளியே வந்தபின் உமர் (ரலி) அவர்களை நோக்கி,) (நபி(ஸல்) அவர்கள் இறக்கவில்லையென்று) சத்தியம் செய்பவரே! நிதானமாயிருங்கள் என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசிய போது உமர் (ரலி) அவர்கள் அமர்ந்து கொண்டார்கள். அப்போது, அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றி விட்டு,

எவர் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை எவர் வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் அல்லாஹ் (என்றும்) உயிராயிருப்பவன்; அவன் இறக்கமாட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள். மேலும்,

நபியே! நீங்களும் இறக்கவிருப்பவர் தாம்; அவர்களும் இறக்கவிருப்பவர்களே என்னும் (39:30ம்) இறை வசனத்தையும்,

முஹம்மது ஓர் இறைத் தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் கூட பல இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். எனவே, அவர் இறந்து விட்டாலோ அல்லது (போரில்) கொல்லப்பட்டு விட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா?
(நினைவிருக்கட்டும்:) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கின்றானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்து விட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதி பலனை மிக விரைவில் வழங்குவான் என்னும் (3:144ம்) இறை வசனத்தையும் ஓதினார்கள்.

உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டையடைக்க) விம்மியழுதார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் (ரலி) அவர்கள் இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போலவும் அபூபக்ர் (ரலி) அவர்கள் மூலமாகத்தான் இதையவர்கள் அறிந்து கொண்டதைப் போலவும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக் கொண்டிருந்தனர்.

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் (ரலி) அவர்கள் இந்த வசனத்தை ஓத நான் கேட்டபோது தான் அது என் நினைவுக்கே வந்தது. எனவே, அதிர்ச்சியடைந்தேன். அப்போது என் கால்களால் என் (உடல்) சுமையை தாங்க முடியவில்லை. அபூபக்ர் (ரலி) அவர்கள் ஓதிக்காட்டிய இவ்வசனத்தைக் கேட்டு நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து நான் தரையில் விழுந்துவிட்டேன்.

நூல்:புகாரி 1241,1242,3667,3668,4454





சோதனைகள்

5 01 2011

மனிதர்களின் வாழ்க்கையில் சோதனைகள் என்பது அன்றாடம் நிகழக்கூடியதாகவே உள்ளது. முஸ்லிம்களின் செயல்கள் அனைத்தும் மறுமைக்காகவே உள்ளது. இவ்வுலக சோதனைகளில் மனமுடைந்து விடாமலிருக்க பின்வரும் குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் உதவும்.

‘அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்’ என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 9:51

உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. அல்லாஹ்வின் உதவி எப்போது? என்று ( இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர் .கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.

திருக்குர்ஆன் 2:214

நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல்
விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா? அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம். உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான்.
பொய்யர்களையும் அறிவான்.

திருக்குர்ஆன் 29:2,3

ஒரு மனிதருக்கு (மறுமையில் ) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)

நூல்: திர்மிதீ 2319

இறை நம்பிக்கையுடைய ஆணும் இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது
விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ 2323

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

திருக்குர்ஆன் 2:286

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படும் வலி, துன்பம், நோய், கவலை, அவர் உணரும் சிறு மனவேதனை உள்பட எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களில் சில மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 5030

“ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும் , அது அல்லாத வேறு எந்தத் துன்பமாயினும் ( அதற்கு ஈடாக) , மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை ” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 5023

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை , அவர்கள் அதன்படி செயல்படாத வரை , அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாத வரை அல்லாஹ் (அவற்றுக்குத் தண்டனை வழங்குவதில்லை) மன்னித்துவிடுகிறான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 6664

நபித்தோழர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எங்கள் உள்ளத்தில் சில (தடுமாற்றமான) விஷயங்கள் எழுகின்றன. அவற்றை (வெளிப்படுத்திப்) பேசுவதைக்கூட நாங்கள் மிகப்பெரும் (பாவ)காரியமாகக் கருதுகிறோம்” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு
நபித்தோழர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். அதற்கு, “அதுதான் ஒளிவுமறைவற்ற (தெளிவான) இறைநம்பிக்கை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).

நூல் : முஸ்லிம் 188

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர் ; ( தம் பாவங்களைத்) தாமே பகிரங்கப்படுத்துகின்றவர்களைத் தவிர. ஒரு மனிதன் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்து விட்டுப் பிறகு காலையானதும் அல்லாஹ் அவனது பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவிட்டிருக்க , இன்னாரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன் என்று அவனே கூறுவது பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத் தெரியாமல்) இறைவன் மறைத்துவிட்டான். (ஆனால் ,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கி விடுகிறான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 6069

” மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார் ” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5778

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 12:87





ஈமான்

17 11 2010

யஹ்யா பின் யஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(இராக்கிலுள்ள) பஸ்ரா நகரில் முதன் முதலில் விதி தொடர்பாக (அப்படி ஒன்று இல்லை என மாற்று)க் கருத்துத் தெரிவித்தவர் மஅபத் அல் ஜுஹனீ
என்பவரேயாவார். இந்நிலையில், நானும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் அல்ஹிம்யரீ (ரஹ்) அவர்களும் ஹஜ்’ அல்லது உம்ரா’ச் செய்வதற்காக (புனித மக்கா நோக்கி)ச் சென்றோம். அப்போது நாங்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் யாரேனும் ஒருவரை நாம் சந்தித்தால் அவரிடம் விதி தொடர்பாக இவர்கள் கூறிவருவதைப் பற்றிக் கேட்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டோம்.

அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்துகொண்டிருந்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. உடனே நானும் என் தோழரும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களைச் சூழ்ந்துகொண்டு, எங்களில் ஒருவர் அவர்களுக்கு வலப் பக்கத்திலும் மற்றொருவர் அவர்களுக்கு இடப் பக்கத்திலும் இருந்துகொண்டோம். (நான் சரளமாகப் பேசக்கூடியவன் என்பதால் அன்னாருடன்) பேசுகின்ற பொறுப்பை என்னிடமே என் தோழர் விட்டுவிடுவார் என எண்ணி நானே பேசினேன்.

அபூஅப்திர் ரஹ்மான் அவர்களே! எங்கள் பகுதியில் சிலர்
தோன்றியிருக்கின்றனர். அவர்கள் குர்ஆனை ஓதுகின்றனர்; தேடித் திரிந்து கல்வி பயில்கின்றனர்” என அவர்களது (நல்ல) தன்மைகளை எடுத்துரைத்து, ஆனால், அவர்கள் விதி என்று ஏதுமில்லை எனவும், நடக்கின்ற காரியங்கள் (இறைவன் திட்டமிடாமலேயே) தற்செயலாகத்தான் நடக்கின்றன என்றும் அவர்கள் கருதுகிறார்கள் என்றேன்.

அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

இத்தகையோரை நீங்கள் சந்தித்தால், அவர்களை விட்டு நானும் என்னை விட்டு அவர்களும் விலகிவிட்டவர்கள் என அவர்களிடம் தெரிவித்துவிடுங்கள். (இந்த) அப்துல்லாஹ் பின் உமர் யார்மீது சத்தியம் செய்வானோ அ(ந்த இறை)வன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவரிடம் உஹுத் மலையளவு தங்கம் இருந்து, அதை அவர் (அறவழிகளில்) செலவிட்டாலும் அவர் விதியை நம்பிக்கை கொள்ளாதவரை
அவரிடமிருந்து அல்லாஹ் அதை ஏற்கமாட்டான் (என்றும் கூறிவிடுங்கள்).

பிறகு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் தந்தை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:

நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த, அடர் கறுப்பு நிறத்தில் தலைமுடி உடைய ஒரு மனிதர் வந்தார். பயணத்தில் வந்த எந்த அடையாளமும் அவரிடம் காணப்படவில்லை; எங்களில் எவருக்கும் அவரை (யார் என)த் தெரிய வில்லை. அவர் நபி (ஸல்) அவர்களின் அருகில் (சென்று), தம் முழங்கால்களை நபியவர்களின்
முழங்கால்களோடு இணைத்துக்கொண்டு (நெருக்கமாக) அமர்ந்தார். அவர் தம் கைகளைத் தம் தொடைகள்மீது வைத்(து பவ்வியமாக அமர்ந்)தார்.

பிறகு முஹம்மதே! இஸ்லாம் (அடிபணிதல்) என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும், தொழுகையைக் கடைப்பிடிப்பதும், ஸகாத்தை
வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும், சென்றுவர இயன்றால் இறையில்லம் கஅபாவில் ஹஜ்’ செய்வதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் உண்மைதான்” என்றார்.

அவர் இவ்வாறு கூறியதைக் கேட்டு, அவரே கேள்வியும் கேட்டுவிட்டு அவரே நபி (ஸல்) அவர்கள் அளித்த பதிலை உறுதிப்படுத்தவும் செய்கிறாரே என்று நாங்கள் வியப்படைந்தோம்.

அடுத்து அவர், ஈமான் (இறைநம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும்; நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும்” என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்மைதான்” என்றார்.

அடுத்து அம்மனிதர், இஹ்சான் (அழகிய முறையில் செயலாற்றல்) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,(இஹ்சான் என்பது,) அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். ஏனெனில், அவனை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கின்றான்” என்று பதிலளித்தார்கள்.

அம்மனிதர்,மறுமை (உலக அழிவு) நாளைப் பற்றி (அது எப்போது வரும் என) எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்), கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். (இது பற்றி எனக்கும் தெரியாது; உங்களுக்கும் தெரியாது.)” என்று கூறினார்கள்.

அம்மனிதர்,மறுமை நாளின் அடையாளங்களைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள்!” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,ஓர் அடிமைப் பெண் தன் எசமானியைப் பெற்றெடுப்பதும், காலில் செருப்பில்லாத, அரைகுறை ஆடைகளை அணிந்துள்ள ஏழைகளான ஆட்டு இடையர்கள் போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்கள் கட்டுவதை நீங்கள் காண்பதும் ஆகும்” என்று கூறினார்கள்.

பிறகு அம்மனிதர் சென்றுவிட்டார். நீண்ட நேரம் நான் (அங்கேயே) இருந்தேன். பின்னர் என்னிடம் நபி (ஸல்) அவர்கள்,உமரே! கேள்வி கேட்ட அந்த நபர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். உங்களுக்கு உங்களது மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக உங்களிடம் அவர் வந்தார்” என்று சொன்னார்கள்.

நூல் : முஸ்லிம் 1





நிரந்தர நரகம்

17 11 2010

இஸ்லாம் சில செயல்களைச் செய்து அதற்கு பாவமன்னிப்புக் கோராமல் அதே நிலையிலே மரணம் அடைபவர்களுக்கு நிரந்தர நரகம் இருப்பதாக கூறுகிறது. அவை என்ன என்ன என்பதைப் பார்ப்போம் :

நயவஞ்சகர்கள் & இறை மறுப்பாளர்கள் :

நயவஞ்சகர்களான ஆண்களுக்கும், பெண்களுக்கும், (தன்னை) மறுப்போருக்கும் நரக நெருப்பை அல்லாஹ் எச்சரித்து விட்டான். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அது அவர்களுக்குப் போதுமானது. அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு.

திருக்குர்ஆன் 9:68

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போர் :

”மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்” எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். ”இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” என்றே மஸீஹ் கூறினார்.

திருக்குர்ஆன் 5:72

கொலை :

நம்பிக்கை கொண்டவரை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். அவனைச் சபித்தான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.

திருக்குர்ஆன் 4:93

வட்டி :

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். ‘வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

திருக்குர்ஆன் 2:275

தற்கொலை :

” மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார் ” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5778

கட்டாயம் இத்தகையவைகளை நாம் செய்யாமல் கவனமாக இருக்க வேண்டும்.





காபாவில் மலக்கு (?)

18 10 2010

http://kaathir.files.wordpress.com/2010/10/k1.jpg?w=510

அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள்.

திருக்குர்ஆன் 2:3

முஸ்லிம்கள் ஈமான் கொள்ள வேண்டிய மறைவான விஷயங்களில் ஒன்று மலக்குகள்
இருக்கிறார்கள் என்று நம்ப வேண்டும். (ஆதாரம் : முஸ்லிம் 1) அவர்கள் மனிதர்களின் கண்களுக்கு புலப்படமாட்டார்கள். சிலர் காஃபாவின் மீது மலக்கு (?) இருப்பதைப் போல் ஒரு videoவை வெளியிட்டுள்ளனர்.

மலக்குகளை இப்படி மனிதர்களின் கண்களுக்குத் தெரியும் வகையில் அனுப்புவதாக இருந்தால் காபிர்கள் கேட்டார்களே, அப்போதே
அல்லாஹ் அனுப்பியிருப்பான். மனிதர்களை நபிமார்களாக அனுப்பிய போது
நிராகரிப்பவர்கள் கூறியதைப் பாருங்கள் :

‘இவருடன் வானவர் இறக்கப் பட்டிருக்க வேண்டாமா?’ என அவர்கள் கூறுகின்றனர்.

திருக்குர்ஆன் 6:8

அவரது சமுதாயத்தில் (ஏக இறை வனை) மறுத்த பிரமுகர்கள் ‘இவர் உங்களைப்
போன்ற ஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர்
விரும்புகிறார். அல்லாஹ் நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான்.
முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப்பட்டதுமில்லை’ என்றனர்.

திருக்குர்ஆன் 23:24

‘இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில்
நடமாடு கிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர்
எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?’ என்று கேட்கின்றனர்.

திருக்குர்ஆன் 25:7

‘அல்லாஹ்வைத் தவிர (எதையும்) வணங்காதீர்கள்!’ என்று (போதிக்க)
அவர்களுக்கு முன்னரும், அவர்களுக்குப் பின்னரும் மக்களிடம் தூதர்கள்
வந்தனர். அதற்கவர்கள் ‘எங்கள் இறைவன் நினைத்திருந்தால் வானவர்களை
இறக்கியிருப்பான். எனவே எதனுடன் அனுப்பப்பட்டுள்ளீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்கள்’ எனக் கூறினர்.

திருக்குர்ஆன் 41:14

அதற்கு அல்லாஹ்வின் பதிலைப் பாருங்கள் :

வானவரை அனுப்புவதாக வைத்துக் கொண்டாலும் அவரை மனிதராகவே ஆக்கியிருப்போம்.
எதில் குழம்பிப் போனார்களோ அதே குழப்பத்தை (அப்போது மீண்டும்) ஏற்படுத்தியிருப்போம்.

திருக்குர்ஆன் 6:9

மலக்குகள் அவர்களுக்கென நியமிக்கப்பட்ட வேலையைச் சரியாக செய்பவர்கள்.
அந்த வேலைகள் அல்லாமல் வேறு பணிக்காக இறைவன் மலக்குகளை அனுப்புவதாக
இருந்தால் அநியாயக்காரர்களை அழிக்கவே அனுப்புவான். காஃபாவின் மீது
படுத்துக் கிடக்கவெல்லாம் அனுப்பவே மாட்டான்.

‘இவருடன் வானவர் இறக்கப் பட்டிருக்க வேண்டாமா?’ என அவர்கள் கூறுகின்றனர்.
வானவரை நாம் அனுப்பியிருந்தால் காரியம் முடிக்கப்பட்டு விடும். பின்னர்
அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 6:8

மலக்குகளை இதற்கு முன்பு பார்த்திருந்தால் தான் இது மலக்கு என்பதை சொல்ல
முடியும். மலக்குகள் இறக்கைகளோடு இருப்பர் என்பதை மட்டும் வைத்துக்
கொண்டு இதை உருவாக்கியிருக்கிறார்கள். இன்றைக்கு உள்ள தொழில்நுட்பத்தை
வைத்து எதையும் வடிவமைக்கலாம்.

மலக்குகள் அல்லாஹ் நியமித்த பணியை செய்வதை தவிர வேறு வேலை எதையும் செய்ய
மாட்டார்கள். காஃபாவின் மேல் படுத்துக் கிடக்கும் மலக்கு என்று
குர்ஆனிலும் இல்லை ஹதீஸிலும் இல்லை.

மலக்குகளை படம் பிடிக்க முடியும் என்றால் ஒவ்வொரு மனிதனின் நன்மை தீமைகளை
பதிவு செய்யும் மலக்குகளை படம் பிடித்திருக்க முடியுமே, அல்லாஹ்வின்
ஆணைப்படி நம்மை பாதுகாப்பதற்காக நம் கூடவே இருக்கும் மலக்குகளை
பிடித்திருக்க முடியுமே, ஏதோ காஃபாவில் மட்டும் தான் மலக்குகள் இருப்பது
போல் இந்த படத்தில் போட்டுள்ளனர். ஒவ்வொரு பள்ளிவாசலிலும் தான் மலக்குகள்
உள்ளனர். அதையெல்லாம் படம் பிடிக்க முடியுமா ?

இப்போது ஏன் அது போல் மலக்கு வரவில்லை.

இது போன்று எப்படியும் வடிவமைக்கலாம் என்பதை உணர்த்தும் வேறு விதமான படங்கள் :

இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?

மார்க்கத்தைப் பரப்பக் கூட முஸ்லிம்கள் பொய் சொல்வதற்கு அனுமதி இல்லை.
ஆனால் சில முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள் என்றால், தக்காளியில் அரபு
எழுத்து, மீனில் அரபு எழுத்து இவைகளையெல்லாம் அற்புதம் என்கின்றனர்.
இறந்தது போல் ஒரு கொடூர உருவத்தைப் போட்டு இது ஓமனில் ஒருவருக்கு ஏற்பட்ட
கப்ர் வேதனை என்கின்றனர், பள்ளிவாசலின் மேற்கூரை பறக்கிறது என்கின்றனர்.

இதனால் இஸ்லாத்தை பெருமைப்படுத்தலாம் என நினைக்கின்றனர். எதையும் நம்பும்
சில முஸ்லிம்கள் வேண்டுமானால் சுப்ஹானல்லாஹ் அல்லாஹூ அக்பர் எனக் கூறிக்
கொண்டு திரியலாம். இந்த பொய்களால் மாற்று மத சகோதரர்களிடம் இஸ்லாத்தின் மதிப்பு குறையவே செய்யும்.

அல்லாஹ்வின் அற்புதங்கள், அத்தாட்சிகள் எவ்வளவோ இருக்கும் போது இத்தகைய
பொய்களைப் பரப்புவதால் என்ன இலாபம். நாம் அனைவரும் பின்வரும் நபிமொழியை
மனிதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (ஆராயாமல் பிறருக்கு) அறிவிப்பதே
அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 6

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் காப்பானாக.





புறம் பேசுதல்

6 10 2010

புறம் பேசுவது சம்பந்தமான குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் :

குறை கூறிப் புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான்.

திருக்குர்ஆன் 104:1

நம்பிக்கை கொண்டோரே ! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!
சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர்
மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின்
மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை
அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 49:12

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

( ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்) , ” புறம்
பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா ?” என்று
கேட்டார்கள். அதற்கு மக்கள் , ” அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே
நன்கறிந்தவர்கள் ” என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் , ” நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக்
கூறுவதாகும் ” என்று பதிலளித்தார்கள். அப்போது , ” நான் சொல்லும் குறை
என் சகோதரரிடம் இருந்தாலுமா ? ( புறம் பேசுதலாக ஆகும்) , கூறுங்கள் ”
என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் , ” நீர்
சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான் , நீர் அவரைப் பற்றிப்
புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ ,
நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர் ” என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 5048

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் மிஃராஜிற்கு கொண்டு செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தார்களை கடந்து
சென்றேன். அவர்களுக்கு செம்பு உலோகத்திலான நகங்கள் இருந்தன. அதன் மூலம்
தங்களுடைய முகங்களையும், நெஞ்சையும் பிளந்து கொண்டிருந்தார்கள். இவர்கள்
யார் என்று ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் வினவினேன். அதற்கவர்கள் இவர்கள்
தான் (புறம் பேசி) மக்களுடைய இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இன்னும் இவர்கள் தான் மக்களின் மானங்களில் விளையாடிக்கொண்டிருந்தார்கள் என்று கூறினார்.

நூல்: அபூதாவூத் 4235

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

( ஆதாரமில்லாமல் பிறரைச்) சந்தேகிப்பது குறித்து உங்களை நான்
எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது , பெரும் பொய்யாகும்.
(பிறரைப் பற்றித்) துருவித்துருவிக் கேட்காதீர்கள் ; ( அவர்களின்
அந்தரங்கம் பற்றி) ஆராயாதீர்கள். (நீங்கள் வாழ்வதற்காகப் பிறர் வீழ
வேண்டுமெனப்) போட்டியிட்டுக்கொள்ளாதீர்கள் ; பொறாமை கொள்ளாதீர்கள் ;
கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். (மாறாக) அல்லாஹ்வின்
அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 5006

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு மண்ணறைகளை (கப்றுகளை)க்
கடந்து சென்றார்கள். அப்போது (மண்ணறை களிலுள்ள) இவ்விருவரும் வேதனை
செய்யப் படுகிறார்கள். ஆனால் மிகப்பெரும் (பாவச்) செயலுக்காக (இவர்கள்)
இருவரும் வேதனை செய்யப்படவில்லலை. இதோ! இவர் (தம் வாழ்நாளில்) சிறுநீர்
கழிக்கும் போது (தம் உடலை) மறைக்க மாட்டார். இதோ! இவர் (மக்களிடையே) கோள்
சொல்லி (புறம்பேசி)த் திரிந்து கொண்டிருந்தார் என்று கூறினார்கள். பிறகு
பச்சைப் பேரீச்ச மட்டையொன்றைக் கொண்டுவரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து
இவர் (மண்ணறை) மீது ஒன்றையும் அவர் (மண்ணறை) மீது ஒன்றையும் நட்டார்கள்.
பிறகு, இவ்விரண்டின் ஈரம் உலராதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படலாம் என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 6052

ஒரு முஸ்லிமின் மானத்தில் உரிமையும் இல்லாமல் வரம்பு மீறுவதுதான்
தண்டனைகளிலே மிகப்பெரியது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அபூதாவூத் 4233

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசிவிடுகிறார்.
அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவைவிட
அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்.

நூல்: புகாரி 6477

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக் குரிய ஓரு வார்த்தையை சர்வசாதாரணமாக
(அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக
அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார்
அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன்
பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 6478

யார் ஒரு முஃமினிடம் இல்லாததை கூறுவாரோ அவரை அல்லாஹ், சகதியும்,
நரகவாசிகளின் சீலும் சலமும் கலந்திருக்கின்ற மலையில் தங்க வைப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அபூதாவூத் 3123





ஜுமுஆத் தொழுகை

1 10 2010

ஜுமுஆத் தொழுகை சம்பந்தமாக :

நம்பிக்கை கொண்டோரே ! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால்
அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்!
நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.
தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத்
தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

திருக்குர்ஆன் 62:9,10

சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஜுமுஆ நாளில் சொல்லப்படும் முதல் தொழுகை அறிவிப்பு (பாங்கு) அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் ( ரலி) உமர் (ரலி) ஆகியோரது
காலத்திலும் இமாம் (உரையாற்றுவதற்கு முன்) சொற்பொழிவு மேடை மீது
அமர்ந்ததுமே சொல்லப்பட்டுவந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சி காலத்தின்
போது மக்கள் தொகை உயர்ந்து விட்ட போது உஸ்மான் (ரலி) அவர்கள் ஜுமுஆ
நாளில் மூன்றாவது தொழுகை அறிவிப்பு சொல்லும்படி கட்டளையிட் டார்கள்.
ஆகவே , ( மதீனாவின் கடைவீதியிலுள்ள) ஸவ்ரா எனுமிடத்தில் தொழுகை
அறிவிப்புச் சொல்லப்பட்டது. (தொழுகை அறிவிப்பு விஷயத்தில் இரண்டு பாங்கு
ஒரு இகாமத் எனும்) அந்த நிலை நிலைபெற்று விட்டது.

நூல்: புகாரி 916

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள்:

வெள்ளிக்கிழமை குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர்மீதும் கடமையாகும்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 1535

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜுமுஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்து விட்டால் வானவர்கள் (ஜுமுஆத் தொழுகை
நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயிலில் நின்று கொண்டு முதன் முதலாக உள்ளே
நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை)
எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். நேரத்தோடு (ஜுமுஆ வுக்கு)
வருபவரது நிலை ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவரது நிலைக்கு
ஒப்பானதாகும். அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர்
போன்றவராவார். அதற்கடுத்து வருபவர் கொம்புள்ள ஓர் ஆட்டையும் அதற்கடுத்து
வருபவர் ஒரு கோழியையும் அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம்
செய்தவர் போன்றாவார்கள். இமாம் ( உரையாற்றுவதற்காகப்) புறப்பட்டு வந்து
விட்டால் வானவர்கள் தங்கள் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி (வைத்து)
விட்டு (அவரது உபதேச) உரையைச் செவி தாழ்த்திக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 929

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜுமுஆ நாளில் ஒருவர் குளிக்கிறார். தம்மால் இயன்ற தூய்மைகள்
மேற்கொள்கிறார். தம்மிடமுள்ள எண்ணெயைத் தேய்த்துக் கொள்கிறார். அல்லது
தம் வீட்டிலுள்ள நறுமணத்தைத் தடவிக் கொள்கிறார். பிறகு புறப்பட்டு
(நெரிசலை உருவாக்கும் விதமாக) இருவரை பிரித்துக் கொண்டு வராமல்
(பள்ளிக்கு) வந்து தமக்கு விதியாக்கப்பட்டுள் ளதைத் தொழுகிறார். பிறகு
இமாம் உரையாற்றத் தொடங்கியதும் அமைதியாக அதைச் செவியேற்கிறார். எனில்
அவருக்கு அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையிலேற்படும்
பாவங்கள் மன்னிக்கப்பட்டே தீருகின்றன.

இதை சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 883

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று
உரையாற்றிக்கொண்டிருக்கையில் ஒரு மனிதர் பள்ளிவாசலுக்குள்ளே வந்(து
தொழாமல் அமர்ந்)தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீர்
தொழுதுவிட்டீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “இல்லை’ என்றார்.
“எழுந்து இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 1585

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ஜுமுஆ தொழுத பின் நான்கு ரக்அத்கள் (சுன்னத்) தொழட்டும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 1597

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ தொழுத பின் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.

இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 1602








Follow

Get every new post delivered to your Inbox.