சோதனைகள்

5 01 2011

மனிதர்களின் வாழ்க்கையில் சோதனைகள் என்பது அன்றாடம் நிகழக்கூடியதாகவே உள்ளது. முஸ்லிம்களின் செயல்கள் அனைத்தும் மறுமைக்காகவே உள்ளது. இவ்வுலக சோதனைகளில் மனமுடைந்து விடாமலிருக்க பின்வரும் குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் உதவும்.

‘அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்’ என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 9:51

உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. அல்லாஹ்வின் உதவி எப்போது? என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர் .கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.

திருக்குர்ஆன் 2:214

நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல்
விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா? அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம். உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான்.
பொய்யர்களையும் அறிவான்.

திருக்குர்ஆன் 29:2,3

ஒரு மனிதருக்கு (மறுமையில் ) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)

நூல்: திர்மிதீ 2319

இறை நம்பிக்கையுடைய ஆணும் இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது
விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ 2323

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

திருக்குர்ஆன் 2:286

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படும் வலி, துன்பம், நோய், கவலை, அவர் உணரும் சிறு மனவேதனை உள்பட எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களில் சில மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 5030

“ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும் , அது அல்லாத வேறு எந்தத் துன்பமாயினும் ( அதற்கு ஈடாக) , மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை ” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 5023

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை , அவர்கள் அதன்படி செயல்படாத வரை , அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாத வரை அல்லாஹ் (அவற்றுக்குத் தண்டனை வழங்குவதில்லை) மன்னித்துவிடுகிறான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 6664

நபித்தோழர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எங்கள் உள்ளத்தில் சில (தடுமாற்றமான) விஷயங்கள் எழுகின்றன. அவற்றை (வெளிப்படுத்திப்) பேசுவதைக்கூட நாங்கள் மிகப்பெரும் (பாவ)காரியமாகக் கருதுகிறோம்” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு
நபித்தோழர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். அதற்கு, “அதுதான் ஒளிவுமறைவற்ற (தெளிவான) இறைநம்பிக்கை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).

நூல் : முஸ்லிம் 188

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர் ; ( தம் பாவங்களைத்) தாமே பகிரங்கப்படுத்துகின்றவர்களைத் தவிர. ஒரு மனிதன் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்து விட்டுப் பிறகு காலையானதும் அல்லாஹ் அவனது பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவிட்டிருக்க , இன்னாரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன் என்று அவனே கூறுவது பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத் தெரியாமல்) இறைவன் மறைத்துவிட்டான். (ஆனால் ,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கி விடுகிறான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 6069

” மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார் ” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5778

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 12:87





ஈமான்

17 11 2010

யஹ்யா பின் யஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(இராக்கிலுள்ள) பஸ்ரா நகரில் முதன் முதலில் விதி தொடர்பாக (அப்படி ஒன்று இல்லை என மாற்று)க் கருத்துத் தெரிவித்தவர் மஅபத் அல் ஜுஹனீ
என்பவரேயாவார். இந்நிலையில், நானும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் அல்ஹிம்யரீ (ரஹ்) அவர்களும் ஹஜ்’ அல்லது உம்ரா’ச் செய்வதற்காக (புனித மக்கா நோக்கி)ச் சென்றோம். அப்போது நாங்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் யாரேனும் ஒருவரை நாம் சந்தித்தால் அவரிடம் விதி தொடர்பாக இவர்கள் கூறிவருவதைப் பற்றிக் கேட்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டோம்.

அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்துகொண்டிருந்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. உடனே நானும் என் தோழரும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களைச் சூழ்ந்துகொண்டு, எங்களில் ஒருவர் அவர்களுக்கு வலப் பக்கத்திலும் மற்றொருவர் அவர்களுக்கு இடப் பக்கத்திலும் இருந்துகொண்டோம். (நான் சரளமாகப் பேசக்கூடியவன் என்பதால் அன்னாருடன்) பேசுகின்ற பொறுப்பை என்னிடமே என் தோழர் விட்டுவிடுவார் என எண்ணி நானே பேசினேன்.

அபூஅப்திர் ரஹ்மான் அவர்களே! எங்கள் பகுதியில் சிலர்
தோன்றியிருக்கின்றனர். அவர்கள் குர்ஆனை ஓதுகின்றனர்; தேடித் திரிந்து கல்வி பயில்கின்றனர்” என அவர்களது (நல்ல) தன்மைகளை எடுத்துரைத்து, ஆனால், அவர்கள் விதி என்று ஏதுமில்லை எனவும், நடக்கின்ற காரியங்கள் (இறைவன் திட்டமிடாமலேயே) தற்செயலாகத்தான் நடக்கின்றன என்றும் அவர்கள் கருதுகிறார்கள் என்றேன்.

அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

இத்தகையோரை நீங்கள் சந்தித்தால், அவர்களை விட்டு நானும் என்னை விட்டு அவர்களும் விலகிவிட்டவர்கள் என அவர்களிடம் தெரிவித்துவிடுங்கள். (இந்த) அப்துல்லாஹ் பின் உமர் யார்மீது சத்தியம் செய்வானோ அ(ந்த இறை)வன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவரிடம் உஹுத் மலையளவு தங்கம் இருந்து, அதை அவர் (அறவழிகளில்) செலவிட்டாலும் அவர் விதியை நம்பிக்கை கொள்ளாதவரை
அவரிடமிருந்து அல்லாஹ் அதை ஏற்கமாட்டான் (என்றும் கூறிவிடுங்கள்).

பிறகு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் தந்தை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:

நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த, அடர் கறுப்பு நிறத்தில் தலைமுடி உடைய ஒரு மனிதர் வந்தார். பயணத்தில் வந்த எந்த அடையாளமும் அவரிடம் காணப்படவில்லை; எங்களில் எவருக்கும் அவரை (யார் என)த் தெரிய வில்லை. அவர் நபி (ஸல்) அவர்களின் அருகில் (சென்று), தம் முழங்கால்களை நபியவர்களின்
முழங்கால்களோடு இணைத்துக்கொண்டு (நெருக்கமாக) அமர்ந்தார். அவர் தம் கைகளைத் தம் தொடைகள்மீது வைத்(து பவ்வியமாக அமர்ந்)தார்.

பிறகு முஹம்மதே! இஸ்லாம் (அடிபணிதல்) என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும், தொழுகையைக் கடைப்பிடிப்பதும், ஸகாத்தை
வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும், சென்றுவர இயன்றால் இறையில்லம் கஅபாவில் ஹஜ்’ செய்வதும் ஆகும்
” என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் உண்மைதான்” என்றார்.

அவர் இவ்வாறு கூறியதைக் கேட்டு, அவரே கேள்வியும் கேட்டுவிட்டு அவரே நபி (ஸல்) அவர்கள் அளித்த பதிலை உறுதிப்படுத்தவும் செய்கிறாரே என்று நாங்கள் வியப்படைந்தோம்.

அடுத்து அவர், ஈமான் (இறைநம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும்; நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும்” என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்மைதான்” என்றார்.

அடுத்து அம்மனிதர், இஹ்சான் (அழகிய முறையில் செயலாற்றல்) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,(இஹ்சான் என்பது,) அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். ஏனெனில், அவனை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கின்றான்” என்று பதிலளித்தார்கள்.

அம்மனிதர்,மறுமை (உலக அழிவு) நாளைப் பற்றி (அது எப்போது வரும் என) எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்), கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். (இது பற்றி எனக்கும் தெரியாது; உங்களுக்கும் தெரியாது.)” என்று கூறினார்கள்.

அம்மனிதர்,மறுமை நாளின் அடையாளங்களைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள்!” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,ஓர் அடிமைப் பெண் தன் எசமானியைப் பெற்றெடுப்பதும், காலில் செருப்பில்லாத, அரைகுறை ஆடைகளை அணிந்துள்ள ஏழைகளான ஆட்டு இடையர்கள் போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்கள் கட்டுவதை நீங்கள் காண்பதும் ஆகும்” என்று கூறினார்கள்.

பிறகு அம்மனிதர் சென்றுவிட்டார். நீண்ட நேரம் நான் (அங்கேயே) இருந்தேன். பின்னர் என்னிடம் நபி (ஸல்) அவர்கள்,உமரே! கேள்வி கேட்ட அந்த நபர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். உங்களுக்கு உங்களது மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக உங்களிடம் அவர் வந்தார்” என்று சொன்னார்கள்.

நூல் : முஸ்லிம் 1





நிரந்தர நரகம்

17 11 2010

இஸ்லாம் சில செயல்களைச் செய்து அதற்கு பாவமன்னிப்புக் கோராமல் அதே நிலையிலே மரணம் அடைபவர்களுக்கு நிரந்தர நரகம் இருப்பதாக கூறுகிறது. அவை என்ன என்ன என்பதைப் பார்ப்போம் :

நயவஞ்சகர்கள் and இறை மறுப்பாளர்கள் :

நயவஞ்சகர்களான ஆண்களுக்கும், பெண்களுக்கும், (தன்னை) மறுப்போருக்கும் நரக நெருப்பை அல்லாஹ் எச்சரித்து விட்டான். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அது அவர்களுக்குப் போதுமானது. அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு.

திருக்குர்ஆன் 9:68

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போர் :

”மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்” எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். ”இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” என்றே மஸீஹ் கூறினார்.

திருக்குர்ஆன் 5:72

கொலை :

நம்பிக்கை கொண்டவரை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். அவனைச் சபித்தான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.

திருக்குர்ஆன் 4:93

வட்டி :

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். ‘வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

திருக்குர்ஆன் 2:275

தற்கொலை :

“மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார் ” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5778

கட்டாயம் இத்தகையவைகளை நாம் செய்யாமல் கவனமாக இருக்க வேண்டும்.








%d bloggers like this: