காபாவில் மலக்கு (?)

18 10 2010

அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள்.

திருக்குர்ஆன் 2:3

முஸ்லிம்கள் ஈமான் கொள்ள வேண்டிய மறைவான விஷயங்களில் ஒன்று மலக்குகள்
இருக்கிறார்கள் என்று நம்ப வேண்டும். அவர்கள் மனிதர்களின் கண்களுக்கு புலப்படமாட்டார்கள். சிலர் ஓளிச்சிதறலை வைத்து காஃபாவின் மீது மலக்கு (?) இருப்பதைப் போல் சித்தரித்து ஒரு videoவை வெளியிட்டுள்ளனர்.

மலக்குகளை இப்படி மனிதர்களின் கண்களுக்குத் தெரியும் வகையில் அனுப்புவதாக இருந்தால் காபிர்கள் கேட்டார்களே, அப்போதே
அல்லாஹ் அனுப்பியிருப்பான். மனிதர்களை நபிமார்களாக அனுப்பிய போது நிராகரிப்பவர்கள் கூறியதைப் பாருங்கள் :

‘இவருடன் வானவர் இறக்கப்பட்டிருக்க வேண்டாமா?’ என அவர்கள் கூறுகின்றனர்.

திருக்குர்ஆன் 6:8

அவரது சமுதாயத்தில் (ஏக இறை வனை) மறுத்த பிரமுகர்கள் ‘இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர்
விரும்புகிறார். அல்லாஹ் நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான்.
முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப்பட்டதுமில்லை’ என்றனர்.

திருக்குர்ஆன் 23:24

‘இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில்
நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர்
எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?’ என்று கேட்கின்றனர்.

திருக்குர்ஆன் 25:7

‘அல்லாஹ்வைத் தவிர (எதையும்) வணங்காதீர்கள்!’ என்று (போதிக்க) அவர்களுக்கு முன்னரும், அவர்களுக்குப் பின்னரும் மக்களிடம் தூதர்கள் வந்தனர். அதற்கவர்கள் ‘எங்கள் இறைவன் நினைத்திருந்தால் வானவர்களை
இறக்கியிருப்பான். எனவே எதனுடன் அனுப்பப்பட்டுள்ளீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்கள்’ எனக் கூறினர்.

திருக்குர்ஆன் 41:14

அதற்கு அல்லாஹ்வின் பதிலைப் பாருங்கள் :

வானவரை அனுப்புவதாக வைத்துக் கொண்டாலும் அவரை மனிதராகவே ஆக்கியிருப்போம்.
எதில் குழம்பிப் போனார்களோ அதே குழப்பத்தை (அப்போது மீண்டும்) ஏற்படுத்தியிருப்போம்.

திருக்குர்ஆன் 6:9

மலக்குகள் அவர்களுக்கென நியமிக்கப்பட்ட வேலையைச் சரியாக செய்பவர்கள். அந்த வேலைகள் அல்லாமல் வேறு பணிக்காக இறைவன் மலக்குகளை அனுப்புவதாக
இருந்தால் அநியாயக்காரர்களை அழிக்கவே அனுப்புவான். காஃபாவின் மீது படுத்துக் கிடக்கவெல்லாம் அனுப்பவே மாட்டான்.

‘இவருடன் வானவர் இறக்கப் பட்டிருக்க வேண்டாமா?’ என அவர்கள் கூறுகின்றனர்.
வானவரை நாம் அனுப்பியிருந்தால் காரியம் முடிக்கப்பட்டு விடும். பின்னர்
அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்
.

திருக்குர்ஆன் 6:8

மலக்குகளை இதற்கு முன்பு பார்த்திருந்தால் தான் இது மலக்கு என்பதை சொல்ல
முடியும். மலக்குகள் இறக்கைகளோடு இருப்பர் என்பதை மட்டும் வைத்துக்
கொண்டு இதை உருவாக்கியிருக்கிறார்கள். இன்றைக்கு உள்ள தொழில்நுட்பத்தை
வைத்து எதையும் வடிவமைக்கலாம்.

மலக்குகள் அல்லாஹ் நியமித்த பணியை செய்வதை தவிர வேறு வேலை எதையும் செய்ய
மாட்டார்கள். காஃபாவின் மேல் படுத்துக் கிடக்கும் மலக்கு என்று
குர்ஆனிலும் இல்லை ஹதீஸிலும் இல்லை.

மலக்குகளை படம் பிடிக்க முடியும் என்றால் ஒவ்வொரு மனிதனின் நன்மை தீமைகளை
பதிவு செய்யும் மலக்குகளை படம் பிடித்திருக்க முடியுமே, அல்லாஹ்வின்
ஆணைப்படி நம்மை பாதுகாப்பதற்காக நம் கூடவே இருக்கும் மலக்குகளை
பிடித்திருக்க முடியுமே, ஏதோ காஃபாவில் மட்டும் தான் மலக்குகள் இருப்பது போல் இந்த படத்தில் போட்டுள்ளனர். ஒவ்வொரு பள்ளிவாசலிலும் தான் மலக்குகள் உள்ளனர். அதையெல்லாம் படம் பிடிக்க முடியுமா ?

இப்போது ஏன் அது போல் மலக்கு வரவில்லை.

இது போன்று எப்படியும் வடிவமைக்கலாம் என்பதை உணர்த்தும் வேறு விதமான படங்கள் :

இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?

மார்க்கத்தைப் பரப்பக் கூட முஸ்லிம்கள் பொய் சொல்வதற்கு அனுமதி இல்லை. ஆனால் சில முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள் என்றால், தக்காளியில் அரபு
எழுத்து, மீனில் அரபு எழுத்து இவைகளையெல்லாம் அற்புதம் என்கின்றனர்.
இறந்தது போல் ஒரு கொடூர உருவத்தைப் போட்டு இது ஓமனில் ஒருவருக்கு ஏற்பட்ட
கப்ர் வேதனை என்கின்றனர், பள்ளிவாசலின் மேற்கூரை பறக்கிறது என்கின்றனர்.

இதனால் இஸ்லாத்தை பெருமைப்படுத்தலாம் என நினைக்கின்றனர். எதையும் நம்பும்
சில முஸ்லிம்கள் வேண்டுமானால் இதை நம்பிக் கொண்டு திரியலாம். இந்த பொய்களால் மாற்று மத சகோதரர்களிடம் இஸ்லாத்தின் மதிப்பு குறையவே செய்யும்.

அல்லாஹ்வின் அற்புதங்கள், அத்தாட்சிகள் எவ்வளவோ இருக்கும் போது இத்தகைய
பொய்களைப் பரப்புவதால் என்ன லாபம்?. நாம் அனைவரும் பின்வரும் நபிமொழியை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (ஆராயாமல் பிறருக்கு) அறிவிப்பதே
அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 6

எல்லாம் வல்ல இறைவன் நம்மைக் காப்பானாக…

புறம் பேசுதல்

6 10 2010

புறம் பேசுவது சம்பந்தமான குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் :

குறை கூறிப் புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான்.

திருக்குர்ஆன் 104:1

நம்பிக்கை கொண்டோரே ! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!
சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர்
மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின்
மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை
அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 49:12

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்) , ” புறம்
பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா ?” என்று
கேட்டார்கள். அதற்கு மக்கள் , ” அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே
நன்கறிந்தவர்கள் ” என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் , ” நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக்
கூறுவதாகும் ” என்று பதிலளித்தார்கள். அப்போது , ” நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா ? ( புறம் பேசுதலாக ஆகும்) , கூறுங்கள் ” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் , ” நீர்
சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான் , நீர் அவரைப் பற்றிப்
புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ ,
நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர் ” என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 5048

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் மிஃராஜிற்கு கொண்டு செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தார்களை கடந்து
சென்றேன். அவர்களுக்கு செம்பு உலோகத்திலான நகங்கள் இருந்தன. அதன் மூலம்
தங்களுடைய முகங்களையும், நெஞ்சையும் பிளந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் யார் என்று ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் வினவினேன். அதற்கவர்கள் இவர்கள்
தான் (புறம் பேசி) மக்களுடைய இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இன்னும் இவர்கள் தான் மக்களின் மானங்களில் விளையாடிக்கொண்டிருந்தார்கள் என்று கூறினார்.

நூல்: அபூதாவூத் 4235

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

( ஆதாரமில்லாமல் பிறரைச்) சந்தேகிப்பது குறித்து உங்களை நான்
எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது , பெரும் பொய்யாகும்.
(பிறரைப் பற்றித்) துருவித்துருவிக் கேட்காதீர்கள் ; ( அவர்களின்
அந்தரங்கம் பற்றி) ஆராயாதீர்கள். (நீங்கள் வாழ்வதற்காகப் பிறர் வீழ வேண்டுமெனப்) போட்டியிட்டுக்கொள்ளாதீர்கள் ; பொறாமை கொள்ளாதீர்கள் ;
கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். (மாறாக) அல்லாஹ்வின்
அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 5006

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு மண்ணறைகளை (கப்றுகளை)க்
கடந்து சென்றார்கள். அப்போது (மண்ணறை களிலுள்ள) இவ்விருவரும் வேதனை
செய்யப் படுகிறார்கள். ஆனால் மிகப்பெரும் (பாவச்) செயலுக்காக (இவர்கள்)
இருவரும் வேதனை செய்யப்படவில்லலை. இதோ! இவர் (தம் வாழ்நாளில்) சிறுநீர்
கழிக்கும் போது (தம் உடலை) மறைக்க மாட்டார். இதோ! இவர் (மக்களிடையே) கோள்
சொல்லி (புறம்பேசி)த் திரிந்து கொண்டிருந்தார் என்று கூறினார்கள். பிறகு பச்சைப் பேரீச்ச மட்டையொன்றைக் கொண்டுவரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து இவர் (மண்ணறை) மீது ஒன்றையும் அவர் (மண்ணறை) மீது ஒன்றையும் நட்டார்கள்.
பிறகு, இவ்விரண்டின் ஈரம் உலராதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படலாம் என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 6052

ஒரு முஸ்லிமின் மானத்தில் உரிமையும் இல்லாமல் வரம்பு மீறுவதுதான்
தண்டனைகளிலே மிகப்பெரியது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அபூதாவூத் 4233

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசிவிடுகிறார்.
அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவைவிட
அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்.

நூல்: புகாரி 6477

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக் குரிய ஓரு வார்த்தையை சர்வசாதாரணமாக
(அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக
அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன்
பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 6478

யார் ஒரு முஃமினிடம் இல்லாததை கூறுவாரோ அவரை அல்லாஹ், சகதியும், நரகவாசிகளின் சீலும் சலமும் கலந்திருக்கின்ற மலையில் தங்க வைப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அபூதாவூத் 3123

ஜுமுஆத் தொழுகை

1 10 2010

ஜுமுஆத் தொழுகை சம்பந்தமாக :

நம்பிக்கை கொண்டோரே ! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால்
அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்!
நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.
தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத்
தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

திருக்குர்ஆன் 62:9,10

சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஜுமுஆ நாளில் சொல்லப்படும் முதல் தொழுகை அறிவிப்பு (பாங்கு) அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் ( ரலி) உமர் (ரலி) ஆகியோரது
காலத்திலும் இமாம் (உரையாற்றுவதற்கு முன்) சொற்பொழிவு மேடை மீது
அமர்ந்ததுமே சொல்லப்பட்டுவந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சி காலத்தின்
போது மக்கள் தொகை உயர்ந்து விட்ட போது உஸ்மான் (ரலி) அவர்கள் ஜுமுஆ
நாளில் மூன்றாவது தொழுகை அறிவிப்பு சொல்லும்படி கட்டளையிட் டார்கள்.
ஆகவே , ( மதீனாவின் கடைவீதியிலுள்ள) ஸவ்ரா எனுமிடத்தில் தொழுகை
அறிவிப்புச் சொல்லப்பட்டது. (தொழுகை அறிவிப்பு விஷயத்தில் இரண்டு பாங்கு
ஒரு இகாமத் எனும்) அந்த நிலை நிலைபெற்று விட்டது.

நூல்: புகாரி 916

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள்:

வெள்ளிக்கிழமை குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர்மீதும் கடமையாகும்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 1535

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜுமுஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்து விட்டால் வானவர்கள் (ஜுமுஆத் தொழுகை
நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயிலில் நின்று கொண்டு முதன் முதலாக உள்ளே
நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை)
எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். நேரத்தோடு (ஜுமுஆ வுக்கு)
வருபவரது நிலை ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவரது நிலைக்கு
ஒப்பானதாகும். அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர்
போன்றவராவார். அதற்கடுத்து வருபவர் கொம்புள்ள ஓர் ஆட்டையும் அதற்கடுத்து
வருபவர் ஒரு கோழியையும் அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம்
செய்தவர் போன்றாவார்கள். இமாம் ( உரையாற்றுவதற்காகப்) புறப்பட்டு வந்து
விட்டால் வானவர்கள் தங்கள் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி (வைத்து)
விட்டு (அவரது உபதேச) உரையைச் செவி தாழ்த்திக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 929

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜுமுஆ நாளில் ஒருவர் குளிக்கிறார். தம்மால் இயன்ற தூய்மைகள்
மேற்கொள்கிறார். தம்மிடமுள்ள எண்ணெயைத் தேய்த்துக் கொள்கிறார். அல்லது
தம் வீட்டிலுள்ள நறுமணத்தைத் தடவிக் கொள்கிறார். பிறகு புறப்பட்டு
(நெரிசலை உருவாக்கும் விதமாக) இருவரை பிரித்துக் கொண்டு வராமல்
(பள்ளிக்கு) வந்து தமக்கு விதியாக்கப்பட்டுள் ளதைத் தொழுகிறார். பிறகு
இமாம் உரையாற்றத் தொடங்கியதும் அமைதியாக அதைச் செவியேற்கிறார். எனில்
அவருக்கு அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையிலேற்படும்
பாவங்கள் மன்னிக்கப்பட்டே தீருகின்றன.

இதை சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 883

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று
உரையாற்றிக்கொண்டிருக்கையில் ஒரு மனிதர் பள்ளிவாசலுக்குள்ளே வந்(து
தொழாமல் அமர்ந்)தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீர்
தொழுதுவிட்டீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “இல்லை’ என்றார்.
“எழுந்து இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 1585

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ஜுமுஆ தொழுத பின் நான்கு ரக்அத்கள் (சுன்னத்) தொழட்டும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 1597

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ தொழுத பின் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.

இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 1602
%d bloggers like this: