ஜுமுஆத் தொழுகை

1 10 2010

ஜுமுஆத் தொழுகை சம்பந்தமாக :

நம்பிக்கை கொண்டோரே ! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால்
அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்!
நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.
தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத்
தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

திருக்குர்ஆன் 62:9,10

சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஜுமுஆ நாளில் சொல்லப்படும் முதல் தொழுகை அறிவிப்பு (பாங்கு) அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் ( ரலி) உமர் (ரலி) ஆகியோரது
காலத்திலும் இமாம் (உரையாற்றுவதற்கு முன்) சொற்பொழிவு மேடை மீது
அமர்ந்ததுமே சொல்லப்பட்டுவந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சி காலத்தின்
போது மக்கள் தொகை உயர்ந்து விட்ட போது உஸ்மான் (ரலி) அவர்கள் ஜுமுஆ
நாளில் மூன்றாவது தொழுகை அறிவிப்பு சொல்லும்படி கட்டளையிட் டார்கள்.
ஆகவே , ( மதீனாவின் கடைவீதியிலுள்ள) ஸவ்ரா எனுமிடத்தில் தொழுகை
அறிவிப்புச் சொல்லப்பட்டது. (தொழுகை அறிவிப்பு விஷயத்தில் இரண்டு பாங்கு
ஒரு இகாமத் எனும்) அந்த நிலை நிலைபெற்று விட்டது.

நூல்: புகாரி 916

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள்:

வெள்ளிக்கிழமை குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர்மீதும் கடமையாகும்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 1535

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜுமுஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்து விட்டால் வானவர்கள் (ஜுமுஆத் தொழுகை
நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயிலில் நின்று கொண்டு முதன் முதலாக உள்ளே
நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை)
எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். நேரத்தோடு (ஜுமுஆ வுக்கு)
வருபவரது நிலை ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவரது நிலைக்கு
ஒப்பானதாகும். அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர்
போன்றவராவார். அதற்கடுத்து வருபவர் கொம்புள்ள ஓர் ஆட்டையும் அதற்கடுத்து
வருபவர் ஒரு கோழியையும் அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம்
செய்தவர் போன்றாவார்கள். இமாம் ( உரையாற்றுவதற்காகப்) புறப்பட்டு வந்து
விட்டால் வானவர்கள் தங்கள் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி (வைத்து)
விட்டு (அவரது உபதேச) உரையைச் செவி தாழ்த்திக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 929

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜுமுஆ நாளில் ஒருவர் குளிக்கிறார். தம்மால் இயன்ற தூய்மைகள்
மேற்கொள்கிறார். தம்மிடமுள்ள எண்ணெயைத் தேய்த்துக் கொள்கிறார். அல்லது
தம் வீட்டிலுள்ள நறுமணத்தைத் தடவிக் கொள்கிறார். பிறகு புறப்பட்டு
(நெரிசலை உருவாக்கும் விதமாக) இருவரை பிரித்துக் கொண்டு வராமல்
(பள்ளிக்கு) வந்து தமக்கு விதியாக்கப்பட்டுள் ளதைத் தொழுகிறார். பிறகு
இமாம் உரையாற்றத் தொடங்கியதும் அமைதியாக அதைச் செவியேற்கிறார். எனில்
அவருக்கு அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையிலேற்படும்
பாவங்கள் மன்னிக்கப்பட்டே தீருகின்றன.

இதை சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 883

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று
உரையாற்றிக்கொண்டிருக்கையில் ஒரு மனிதர் பள்ளிவாசலுக்குள்ளே வந்(து
தொழாமல் அமர்ந்)தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீர்
தொழுதுவிட்டீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “இல்லை’ என்றார்.
“எழுந்து இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 1585

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ஜுமுஆ தொழுத பின் நான்கு ரக்அத்கள் (சுன்னத்) தொழட்டும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 1597

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ தொழுத பின் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.

இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 1602

பாங்கு துஆ

28 09 2010

பாங்கு துஆ சம்பந்தமான ஹதீஸ்கள் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை அறிவிப்பை நீங்கள் செவியேற்றால், அறிவிப்பாளர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 627

அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை அறிவிப்பாளர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொன்னால்
நீங்களும் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள். பின்பு
அவர், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் அஷ்ஹது
அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர், அஷ்ஹது அன்ன
முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் அஷ்ஹது அன்ன முஹம்மதர்
ரசூலுல்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர் ஹய்ய அலஸ் ஸலாஹ் என்று
சொன்னால் நீங்கள் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் ( அல்லாஹ்வின்
உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ ( நல்லறங்கள் புரிய)
ஆற்றல்பெறவோ மனிதனால் முடியாது) என்று சொல்லுங்கள். பின்பு அவர் ஹய்ய
அலல் ஃபலாஹ் என்று சொன்னால் நீங்கள், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா
பில்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்
என்று சொன்னால் நீங்களும் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று
சொல்லுங்கள். பின்பு அவர் லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும்
லா இலாஹ இல்லல்லாஹ் என்று மனப்பூர்வமாகச் சொல்லுங்கள். உங்களில் இவ்வாறு
கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார்.

இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 629

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப்
போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள்.
ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால்
அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக
அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்)
பதவியாகும் ; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும்.
அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை
(அல்லாஹ் விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.

( ஸலவாத் :

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா
இப்ராஹீம, வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத்.

அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா
இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத். )

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 628

அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம
(த்)தி ஆ( த்) தி முஹம்மதனில் வஸீல(த்)த வல்ஃபழீல(த்)த வப்அஸ்ஹு
ம(க்)காம(ன்)ம் மஹ்மூதனில்லதீ வஅத்தஹ்

(பொருள்: ‘ முழுமையான இந்த அழைப்புக்குரிய இறைவனே! நிலையான
தொழுகைக்குரியவனே! முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வஸீலா எனும் பதவியையும்,
சிறப்பையும் வழங்குவாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்த புகழுக்குரிய
இடத்தில் அவர்களை எழுப்புவாயாக !’)

என்று யார் பாங்கோசை கேட்கும் போது கூறுவாரோ அவருக்கு மறுமையில் நாளில்
என்னுடைய பரிந்துரை அவசியம் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: புகாரீ 614

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பைக் கேட்கக்கூடியவர் (அறிவிப்பு முடிந்த
பின்பு) அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, வ அன்ன
முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு, ரளீத்து பில்லாஹி ரப்பன், வபி முஹம்மதின் ரசூலன், வபில் இஸ்லாமி தீனன்

என்று சொன்னால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

( பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு
இணையேதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள்
என்று நான் உறுதிமொழிகிறேன். அல்லாஹ்வை இறைவனாகவும் முஹம்மத் (ஸல்)
அவர்களை (அவனுடைய) தூதராகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்.)

இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 630
%d bloggers like this: