முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்களுக்குப் பின் ஒருவரை நேசிக்க வேண்டுமானால் அபூபக்ர் (ரலி) அவர்களைத் தான் நேசிக்க வேண்டும். பல்வேறு கடுமையான சூழ்நிலைகளிலும் மார்க்கத்தில் வளைந்து கொடுக்காதவர். அவரது ஈமான் எந்த அளவிற்கு உறுதியானது என்பதை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கலாம்.
நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (பனூ ஹர்ஸ் குலத்தாரின் இல்லங்கள் அமைந்துள்ள) ஸுன்ஹ் என்னுமிடத்தில் இருந்து கொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பெய்தினார்கள்.
அப்போது உமர் (ரலி) அவர்கள் எழுந்து, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித் தான் ( நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்று தான்) தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி(ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள் என்று சொன்னார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் (அங்கே) வந்து அல்லாஹ்வின் தூதரைப்
போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு விட்டு, அழுதார்கள், பின்பு, ‘அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்! நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! அல்லாஹ் உங்களுக்கு இரண்டு மரணங்களை ஏற்படுத்தவில்லை. உங்கள் மீது விதிக்கப்பட்ட அந்த மரணத்தை நீங்கள் அடைந்துவிட்டீர்கள் ‘ என்று சொல்லிவிட்டு
வெளியேறினார்கள்.
(வெளியே வந்தபின் உமர் (ரலி) அவர்களை நோக்கி,) (நபி(ஸல்) அவர்கள் இறக்கவில்லையென்று) சத்தியம் செய்பவரே! நிதானமாயிருங்கள் என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசிய போது உமர் (ரலி) அவர்கள் அமர்ந்து கொண்டார்கள். அப்போது, அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றி விட்டு,
எவர் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை எவர் வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் அல்லாஹ் (என்றும்) உயிராயிருப்பவன்; அவன் இறக்கமாட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள். மேலும்,
நபியே! நீங்களும் இறக்கவிருப்பவர் தாம்; அவர்களும் இறக்கவிருப்பவர்களே என்னும் (39:30ம்) இறை வசனத்தையும்,
முஹம்மது ஓர் இறைத் தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் கூட பல இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். எனவே, அவர் இறந்து விட்டாலோ அல்லது (போரில்) கொல்லப்பட்டு விட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா?
(நினைவிருக்கட்டும்:) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கின்றானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்து விட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதி பலனை மிக விரைவில் வழங்குவான் என்னும் (3:144ம்) இறை வசனத்தையும் ஓதினார்கள்.
உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டையடைக்க) விம்மியழுதார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் (ரலி) அவர்கள் இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போலவும் அபூபக்ர் (ரலி) அவர்கள் மூலமாகத்தான் இதையவர்கள் அறிந்து கொண்டதைப் போலவும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக் கொண்டிருந்தனர்.
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் (ரலி) அவர்கள் இந்த வசனத்தை ஓத நான் கேட்டபோது தான் அது என் நினைவுக்கே வந்தது. எனவே, அதிர்ச்சியடைந்தேன். அப்போது என் கால்களால் என் (உடல்) சுமையை தாங்க முடியவில்லை. அபூபக்ர் (ரலி) அவர்கள் ஓதிக்காட்டிய இவ்வசனத்தைக் கேட்டு நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து நான் தரையில் விழுந்துவிட்டேன்.
நூல்:புகாரி 1241,1242,3667,3668,4454